சென்னை
வரும் 13 ஆம் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நேற்று சத்திய மூர்த்தி பவனில் அமைந்துள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டம் தமிழக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மற்றும் எச் வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், சஞ்சய் தத் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்ட முடிவுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம், “வரும் 13 ஆம் தேதி அன்று தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது முதல் தமிழல தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இடம் குறித்து வெகு விரைவில் அறிவிக்கப்படும். அவரை தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அவர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். இந்தியாவில் மத சார்பற்ற சக்திகள் வலிமையாக உள்ள இடம் தமிழகம் மட்டுமே ஆகும். தற்போதுள்ள திமுக – காங்கிரஸ் கூட்டணி மதச் சார்பற்ற சக்திகளுக்கு 100% வெற்றியை தரக்கூடிய ஒரு கூட்டணியாகும்” என அவர் தெரிவித்தார்.