திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரிகளுக்கும், பாஜகவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.
வட கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி ஞாயிற்றுக் கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி, ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியானதையடுத்து, கேரள தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கேரளா மட்டுமல்லாமல், தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் பலப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
இதற்காககத்தான் 3 தென் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வயநாட்டை ராகுல் காந்தி தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவின் மைசூர் மற்றும் தமிழகத்தின் நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது, தென் மாநிலங்களில் காங்கிரஸை வலுப்படுத்தும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஏகே.அந்தோணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைய, காங்கிரஸ் மட்டும் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.
அதற்கான வியூகம்தான் அக்கட்சி தென் மாநிலங்களை குறி வைத்துள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் வேட்பாளர் என்ற முழக்கம் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எண்ணுகின்றனர்.
அதோடு, கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதால், முதலில் பாதிக்கப்படுவது இடதுசாரிகள் தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சபரிமலை விவகாரம், சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் தான் வெற்றியை நிர்ணயிப்பதாக உள்ளன. இது ராகுல்காந்தியின் வெற்றியை எளிதாக்கும் என்றே தெரிகிறது.
இடது சாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால்தான், வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் கணக்கை ஆரம்பிக்கலாம் என்று பாஜக நினைத்திருந்தது. ஆனால் ராகுல்காந்தியின் வருகை அக்கட்சியையும் பாதிக்கும் என்றே தெரிகிறது.
ஸ்மிருதி இராணியிடம் தோற்பது உறுதி என்று தெரிந்தே, ராகுல் காந்தி வயநாடுக்கு ஓடிவிட்டதாக கேரள பாஜகவினர் கூறுகின்றனர்.
இது அவர்களது விரக்தியின் வெளிப்பாடு என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.