டெல்லி: ராஜ்காட்டில் காங்கிரஸ் போராட்டத்தின் போது குளிரால் நடுங்கும் தமது தாய் சோனியா காந்திக்கு சால்வை போர்த்தி பாசத்தை வெளிப்படுத்திய ராகுல் காந்தியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் 2 வாரங்களை கடந்து போராட்டங்கள் நடக்கின்றன. அரசியல் கட்சியினருடன், மாணவர் அமைப்பினர், சமூக நல அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர்.
இந் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்காட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது, அரசியலமைப்பு சட்ட முன்னுரையை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாசிக்க மற்றவர்களும் அதை வழிமொழிந்தனர்.
இந்த தருணத்தில் ஒரு பாசமிகு காட்சி அனைவரையும் கவர்ந்தது. பொதுவாக இந்த மாதங்களில் வட மாநிலங்களில் கடும் நிலவும். டிசம்பரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குளிர் வாட்டுகிறது.
இந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது, உடல்நிலை சரியில்லாத நிலையில் சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது குளிரால் அவர் அவதிப்படுவதை கண்டு மகன் ராகுல் காந்தி, மிக நீண்ட சால்வையை தாய்க்கு போர்த்திவிட்டு குளிரில் இருந்து பாதுகாத்தார். அதை லேசான புன்முறுவலுடன் ஏற்கிறார் சோனியா காந்தி
தாயை குளிரில் இருந்து பாதுகாக்கும் மகனின் அந்த பாசமிகு போட்டோ நொடிப்பொழுதில் இணையத்தில் வைரலானது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தாயின் மகனாக, எளிய முறையில் அங்கு ராகுல் காந்தி நடந்து கொண்ட விதத்துக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
[youtube-feed feed=1]