காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அமெரிக்காவில் உள்ள சான் ப்ரான்சிஸ்க்கோ நகருக்கு செல்கிறார்.

ஒரு வார காலம் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ஜூன் 4 ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார்.

எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனக்கு வழங்கப்பட்ட டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை திரும்பிக் கொடுத்த ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு முடிவடையாத நிலையில் அவருக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என்று சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் வழக்கை காரணம் காட்டி ராகுல் காந்தி வெளிநாடு செல்ல தடைவிதிக்க கோருவது ஏற்புடையதல்ல என்று அந்த மனுவை நிராகரித்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் தனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் DC இல் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் தனது ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிந்தனையாளர்கள், இந்திய அமெரிக்கர்கள் மற்றும் வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகளுடன் உரையாடுவார்,

ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துடன் அவர் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.