சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி, அங்கு விவசாயிகளை சந்தித்து பேசியதுடன், அவர்களுடன் இணைந்து வயலில் நாற்று நட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

மோடி பெயர் விமர்சனம் தொடர்பான வழக்கில், தனது எம்.பி. பதவியை இழந்த ராகுல்காந்தி, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸுக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு சென்று பொது மக்களை யும், காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். தற்போது அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு பானிபட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடியவர், அவர்களுடன் சேர்ந்து டிராக்டர் மூலம் உழவு செய்ததுடன், அங்குள்ள வயலில் நாற்றும் நட்டார். இது விவசாயிகளிடையே பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலம் சோனிபட்  மதீனா கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு உதவினார். இமாச்சலப் பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அவர்,  இடையில் அந்த பகுதியில் விவசாயிகள் நாற்று நடவு செய்தை கண்டதும், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், நெல் வயல் ஒன்றின் அருகே நின்று, தனத பேண்டை சட்டையைச் சுருட்டிக் கொண்டு வயலுக்குள் நுழைந்தார். வயலில் இறங்கி டிராக்டர் மூலம் உழுது விவசாயிகளுடன் சேர்ந்து நெல் நடவு செய்தார். தொடர்ந்து, வயலில் பணியாற்றிக்கொண்டிருந்த  விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் உரையாடினார்.

ராகுல்காந்தி சமீபத்தில் டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள பைக் மெக்கானிக் பட்டறைக்கு சென்றுள்ளார். காந்தி பணிமனையில் மெக்கானிக்குகளுடன் உரையாடுவதையும், உடைந்த மோட்டார் சைக்கிள்களை சரிசெய்ய முயற்சிப்பதையும் பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது ராகுல் வயல்வெளியில் நிற்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.