டில்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி டிராக்டரை ஓட்டி வந்தார்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   டில்லி எல்லையில் இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆனால் மத்திய அரசின் பிடிவாதத்தால் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தன.

விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது.   வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் எவ்வித கேள்விக்கும் மத்திய அரசு பதில் சொல்லாமல் உள்ளது,.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு டிராக்டரை ஓட்டி வந்தார்.  பிறகு அவர் செய்தியாளர்களிடம், வேளான் சட்டத்துக்கு எதிர்ப்பை காட்டவும் விவசாயிகளின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கவும் தாம் டிராக்டரில் வந்ததாகத் தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தி, “மத்திய அரசால் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.  அவர்களது எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன.  இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச பல முறை முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.