டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாக, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தைப்போல மேற்குவங்க மாநிலத்தில் அடுத்தஆண்டு மே, ஜுன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு 10.16 சதவீத மக்கள் ஆதரவுடன் இருந்த பாரதியஜனதா கட்சி, தற்போது அங்கு அசூர வளர்ச்சி பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி, அங்கு வசிக்கும் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், மேற்குவங்கத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளை வென்று, மம்தாவுக்கு செக் வைத்துள்ளது. தற்போது மாநிலத்தில் பாஜகவின் வாக்கு 40 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக அங்கு தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரை எந்தவொரு பணிகளும் தொடங்கப்படவில்லை. திரிணாமுல் அணியில் காங்கிரஸ் கட்சி இணையுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், கம்யூனிஸ்டு கட்சிகள், பாஜகவை எதிர்க்கும் நோக்கில் மம்தா கட்சியுடன் இணைய இருப்பதாககூறப்படுகிறது.
இந்த சூழலில், முன்னெடுக்க வேண்டிய தேர்தல் பணிகள் தொடர்பாக ராகுல் காந்தி இன்று மாலை மேற்குவங்க மாநில காங்கிரஸ்கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஜிதின் பிரதாஸா, எம்.பி.க்கள் மற்றும் சட்டப்ரேவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சாா்பற்ற கட்சிகளுடன் மாா்க்சிஸ்ட் கூட்டணி அமைக்க இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஏற்கனவே அறிவித்து உள்ளார். அங்கு. திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிரான தோ்தல் வியூகத்தை மாா்க்சிஸ்ட் வகுக்கும் என்று தெரிவித்ததுடன், பாஜக வெற்றிபெறுவதை தடுக்கும் நோக்கில், மாநிலத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகளுடன் இணைந்து மாா்க்சிஸ்ட் தோ்தலை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.