போபால்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் படுகொலை செய்யப்படுவார் என மிரட்டல் கடிதம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக  முன்னாள் முதல்வர் கமல்நாத் தற்போதைய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை நேரரில் சந்தித்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுமாறு வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் ஒற்றுமையை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நவம்பர் மாதம்  7ந்தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவரது நடைபயணம் தொடர்கிறது. இந்த நடைபயணத்தின் பல பிரபலங்கள் ராகுலுடன் கைகோர்த்து நடைபயணம் செய்து வருகின்றன. இந்த நிலையில்,  மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி இன்று காலை மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகானில் பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுல் காந்தியுடன் இணைந்தார், அவர் பங்கேற்பதை “வரலாற்று” என்று காங்கிரஸ் பாராட்டியது. மகாராஷ்டிராவில் யாத்தையை முடித்துவிட்டு, நவம்பர் 23ந்தேதி அவரது பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் தொடங்குகிறது.

இந்த நிலையில், ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் படுகொலை செய்யப்படுவார் என கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பிரபலமான  ஸ்ரீ குஜராத் ஸ்வீட்ஸ் கடைக்கு,  தபாலில் வந்த ஒரு கடிதத்தில்,  ‘இந்தூரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாத யாத்திரை நுழையும் நாளில், குண்டு வெடித்து ராகுல் காந்தியும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  1984ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை நினைவு படுத்தி கொள்ளுங்கள். ராகுல் காந்தி வருகையின் போது, அவரது அப்பாவும் முன்னாள் இந்திய பிரதமருமான ராஜிவ்காந்திக்கு நடந்தது போன்று, குண்டு வெடித்து ராகுல் காந்தி படுகொலை செய்யப்படுவார். அதையடுத்து கமல்நாத் சுட்டுக் கொல்லப்படுவார்’ என்று எழுதப்பட்டு உள்ளது.

இந்த கடிதத்தை படித்த, கடை முதலாளியாயான  ஸ்ரீ குஜராத் ஸ்வீட்ஸ் கடையின் உரிமையாளர் அஜய் ஜெயின், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தனக்கு கடிதத்தை பற்றி ஒன்றும் தெரியாது எனவும், மர்ம கடிதம் கிடைக்க பெற்ற உடன் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் ராகுல் யாத்திரையின்போது கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள,  மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி பிரிவு தலைவர் கேகே மிஸ்ரா, நாட்டுக்காக பல தியாகங்களையும், இன்னுயிர்களையும் தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த தலைவருக்கு பகிரங்க கொலை மிரட்டல் வந்துள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில அரசும் எளிதாக கடந்து செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டலை அடுத்து, முன்னாள் முதல்வர் கமல்நாத் நேரடியாக தற்போதைய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து தேவையான பாதுகாப்பு வழங்கும்படி வலியுறுத்தி உள்ளார்.

இந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ம.பி.  காவல்துறை இணை ஆணையர் ராஜேஷ் சிங், மர்ம கடிதத்தை அனுப்பியவர் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை உயர்அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தில்  ராகுல் காந்தியின்  பாரத் ஜோடோ யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும். காங்கிரஸால் காவல்துறைக்கு யார் பெயர்கள் கொடுக்கப்படுகிறதோ, அந்த மக்கள் மட்டுமே யாத்திரையின் போது ராகுலுடன் நடக்க முடியும். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​மற்றவர்கள் அவரை எளிதில் அணுக முடியயாத வகையில், அவர் யாத்திரை செல்லும்  சாலையின் இருபுறமும் கயிறு அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலுக்க, பாதுகாப்பு அமைப்பில் 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (டிஎஸ்பி) தவிர, ஒவ்வொரு ஷிப்டிலும் சுமார் 500 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என  தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில் ராகுலுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது,   இந்தூர் (கிராமப்புற) போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் குப்தா கூறுகையில், யாத்திரை தொடங்கும் தேதி காங்கிரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. அப்போதும் பாதுகாப்பு தொடர்பாக முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இளைப்பாறும் இடம், நடைபயணம், கார்கேட் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடங்களில் தேவைக்கு ஏற்ப பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

இதுதவிர, போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதசாரிகள் செல்லும் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய சாலைகளின் போக்குவரத்தும் மாற்றப்படும். அனைத்து மாவட்டங்களிலும் போதிய போலீஸ் படை உள்ளது. இதற்குப் பிறகும் தேவைப்பட்டால் மற்ற மாவட்டங்களில் இருந்து படை வரவழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.