டில்லி
பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் நிரவ் மோடி மற்றும் ரஃபேல் விமானப் பேர ஊழல் குறித்துப் பேச வேண்டும் என ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று பிரதமர் மோடி வானொலியில் மன் கி பாத் என ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். அதில் தாம் பேச வேண்டிய கருத்துக்கள் பற்றி மக்கள் கருத்துக்களை மாதா மாதம் கேட்பது வழக்கம். அது போல இம்மாதம் 25ஆம் தேதி நிகழ்ச்சியில் தாம் பேச வேண்டியவைகள் குறித்து மக்களின் கருத்துக்களை மோடி கேட்டிருந்தார். மக்கள் தமது கருத்துக்களை போன் மூலமும் ஆப் மூலமும் கூட தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். அந்தப் பதிவில், “கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நீங்கள் பேச வேண்டும் என நான் கூறிய கருத்துக்களை நிராகரித்தீர்கள். அப்படி இருக்க எதற்காக யோசனை கேட்கிறீர்கள்? ஒவ்வொரு இந்தியனும் நீங்கள் எதைப் பற்றி பேச வேண்டும் என நினைப்பது உங்களுக்கு தெரியாதா? நிரவ் மோடி கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடிய விவகாரம் மற்றும் ரஃபேல் பேர ஊழல் ஆகியவை குறித்து நீங்கள் பேசுங்கள். மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர்” எனக் கூறி உள்ளார்.