டெல்லி
காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி நாம் எத்தனை விமானங்களை ஆபரேஷன் சிந்தூரில் இழந்தோம் என வினா எழுப்பி உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம்,
”நாங்கள் உங்கள் ராணுவ நிலைகளை குறிவைக்கவில்லை, பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தவுள்ளோம் என இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது’
எனக் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்து,
‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக மத்திய அமைசர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதன் விளைவாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தன என்பதைக் கூற முடியுமா?நமது தாக்குதல் குறித்து தொடக்கத்திலேயே பாகிஸ்தானிடம் கூறியது குற்றம். இதை பொதுவெளியில் ஜெய்சங்கர் ஒப்புக்கொள்கிறார். இதற்கு அங்கீகாரம் வழங்கியது யார்?’
என ராகுல் வினா எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் கூறியதாக வெளியிடப்படும் தகவல் தவறானது என பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவல் சரிபார்ப்புக் குழு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதுடன், ஆபரேஷன் சிந்தூர் தொடக்கத்தில்தான் பாகிஸ்தானுக்கு விளக்கம் கொடுத்ததாகவும், தாக்குதலுக்கு முன்பே கொடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தது.
இதையொட்டி, இன்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி,
”ஆபரேஷன் சிந்தூர் பற்றி முன்னரே தெரிவித்தது ஏதோ ஒரு சிறு குறைபாடு அல்ல, குற்றம். வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரின் மவுனம் மோசமானது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன், பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்? இது தவறு அல்ல, இது ஒரு குற்றம். இந்தியாவுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்”
எனப் பதிவிட்டுள்ளார்.