டெல்லி: தனது மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்கியது டிவிட்டர் நிறுவனத்தின் ஆபத்தான விளையாட்டு என்றும், டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல என்று ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

தலைநகர் டில்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது விதிகளுக்கு முரணானது  என கூறி குழந்தைகள் பாதுகாப்பு துறை டிவிட்டருக்கு அறிவுறுத்திய நிலையில், ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கை டிவிட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது.

மேலும்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்பட  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இந்த நிலையில், டிவிட்டர்நிறுவனத்தின் ஆபத்தான விளையாட்டு என்ற பெயரில் ராகுல்காந்தி வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்,

டுவிட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராகுல் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினாலும் அவரின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட காங்கிரசாரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ‘டடவிட்டரின் ஆபத்தான விளையாட்டு’ என்ற தலைப்பில் யூடியூப்பில் ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது என்ற கருத்தை மீறுவதாகவும், ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, டிட்விட்டரை ‘சார்பு ஊடகம்’ என்று விமர்சித்திருக்கிறார். டிவிட்டர் நிறுவனம்  கணக்கை முடக்கியதன் மூலம்  எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தை செய்வதற்காக எங்கள் அரசியலை வரையறுக்க முயல்கிறது.

இதை  ஒரு அரசியல் தலைவராக நான் விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன். என்னுடைய டிவிட்டர் கணக்கை முடக்கியது ராகுல் என்னும் தனிமனிதனுக்கான தாக்குதல் என்று எளிதாக கடந்துவிட முடியாது.

டிவிட்டர் நிறுவனத்தின் இந்தப் போக்கை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.  இந்தியர்களாகிய நாம் அனைவரும் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.

மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டதால் நமக்கான அரசியலை வரையறுக்க டிவிட்டர் மாதிரியான நிறுவனங்களை நாம் அனுமதிக்கப்போகிறோமா இல்லை நமக்கான அரசியலை நாமே வரையறுக்கப் போகிறோமோ?

இன்று முடக்கியிருப்பது என்னை மட்டுமல்ல…  என்னை டிவிட்டரில் 2 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அவர்கள் தங்களது கருத்துக்களை எனக்கு தெரிவிக்கிறார்கள். தற்போது டிவிட்டர் நிறுவனம் தனது கணக்கை முடக்கி உள்ளதால், 2 கோடி பாலோயர்ஸ்  கருத்துக் கூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது என்ற கருத்தையும் மீறுகிறது.

பாராளுமன்றத்தில் மோடி அரசு எங்களை பேச  அனுமதிக்க மறுக்கிறது.  ஊடகத்துக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில்,  டிவிட்டர் மூலம் நாம் நினைத்த கருத்தை முன்வைக்கலாம் என நான் நினைத்தேன். அது முடியவில்லை.

உண்மையில் டிவிட்டர் நிறுவனம் முழுமையான நடுநிலையானது அல்ல எனத் தெரிந்துள்ளது. இது ஒருதரப்பான தளம். ஆட்சியில் இருக்கும் அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்கிறது.

இவ்வாறு அதில் ராகுல் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

இதுகுறித்து டிவிட்டர் நிறுவனத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து, டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது. அதில், டிவிட்டர் நிறுவன விதிகளை மீறிப் பதிவிட்டதால் ராகுல் மீதும், காங்கிரஸ் கட்சியினர் மீதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு ராகுல் காந்தி சிறுமியை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தங்களை எச்சரித்ததாகவும், அதற்குப் பிறகே ராகுல் காந்தியின் கணக்கை முடக்கியதாகவும் தெரிவித்துஉள்ளது.