ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022: விஞ்ஞான ஜோதிடர் “ஆம்பூர் வேல்முருகன்”

Must read

ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் ஆகும். ஜோதிடத்தில் சர்ப கிரகங்களாகவும் வருணிக்கப்படுகிறது. பொதுவாக பாம்புகள் கரையான் கட்டி வைக்கும்  புற்றை தனது சொந்த இடமாக மாற்றிக் கொள்ளும். அதுபோல ஜோதிடத்தில் ராகு – கேதுக்களுக்கு என்று சொந்த வீடுகள் கிடையாது. ராகு-கேதுக்கள் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டை தனது சொந்த வீடாக மாற்றி, அந்த வீட்டின் பலனை தனது நிலையை பொருத்தும், அந்த வீட்டின் அதிபதியின் நிலையை பொருத்தும் தரும். கோட்சாரத்தில் ராகு – கேது 3 6 11-ல் சஞ்சரிக்கும் போது நற் பலன்களை தருவார்கள். மற்ற இடங்களில் சஞ்சரிக்கும் போது அந்த இடத்திற்கு தகுந்தவாறு நன்மையையும் தீமையும் கலந்த செய்வார்கள். தற்போது வாக்கிய பஞ்சாங்க ரீதியாக 21/3/2022 திங்கட்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்கப்படி 12-4-2022 செவ்வாய்கிழமை அன்றும் ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலா ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த பெயர்ச்சியில் ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் ஏற்படுகின்றன. இனி இந்த ராகு கேது பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினருக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)

நினைத்ததை விடாமுயற்சியுடன் போராடும் மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டில் சஞ்சரித்த ராகு கேது பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 1, 7 ல் சஞ்சரிப்பதால் சிறிது கவனம் தேவை. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். பொருளாதார நிலையில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை அறியாமல் உங்கள் வார்த்தைகள் மற்றவர்களின் மனம் புண்படும்படி இருந்ததே, அது நீங்கும். இருப்பினும் எதிலும் மனக்குழப்பம் உண்டாகும். ஏதோ ஒரு பிரச்சனை இருப்பது போல் ஒரு உணர்வு இருக்கும். ஏக்கம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும் என்பதால் அதனைத் தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னால் முடியும், காலம் மாறும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது எதிலும் நிதானம் பொறுமை விழிப்புணர்வு அவசியம். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். தாய் உடல்நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். சிலர் நான் இருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தம்பதிகளுக்குள் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில்  கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவைப்படும் காலமாகும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமையும், அலைச்சலும் அதிகரிக்கும். நிதானம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் கவனச்சிதறல் உருவாக வாய்ப்புள்ளதால் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு வீண் வதந்திகள் பரவும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்: ( கார்த்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதம்)

பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷபராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 1 – 7 இல் ராகு கேது இருந்து உங்களைப் பாடாய் படுத்தியது. ஜென்மத்தில் ராகு இருந்து மனதில் குழப்ப நிலை, ஏதோ ஒரு பிரச்சினையில் இருப்பது போல ஒரு உணர்வு, உறவுகளால் மனக்கசப்புகள், தாயுடன் கருத்து வேறுபாடு, மனகசப்புகள் இது போன்ற பிரச்சினைகளை தந்த ராகு பகவான்  தற்போது உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்சனை, வியாபார நஷ்டம் இது போன்ற பிரச்சனைகள் தந்த கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஆறில் சஞ்சரிக்கிறார். பனிரெண்டில் ராகு சஞ்சரிக்கும் போது காரியத்தடைகள், வீண் அலைச்சல்கள், வீண் விரயங்கள், மருத்துவ செலவினங்கள் ஏற்படுத்தினாலும், ஜென்ம ராகுவால் ஏற்பட்ட அளவு தீமைகளை தரமாட்டார். கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஆறில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனோபலம் அதிகரிக்கும்.  நீண்டநாள் நோய்களுக்கு தீர்வு. போட்டிகளில் வெற்றி, வழக்கு விஷயங்கள் சாதகமாக அமைதல், பிரபலங்களின் அறிமுகமும் நட்பும் கிடைப்பது, அதன் மூலம் ஆதாயம் பெறுவது, எதிரிகள் இல்லாத சூழல்,எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, காரிய சாதனை, உயர் பதவிகள் கிடைப்பது, முக்கிய பொறுப்புகள் கிடைப்பது, மற்றவர்களால் பாராட்டினை பெறுவது போன்றவை உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவர்கள் இதில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும். அரசியல்வாதிகளுக்கு நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியை வழிபடுவது நன்மை தரும்.

மிதுனம்: (மிருகசீரிடம் 2,3 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம்)

எந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 12- 6 இல் சஞ்சரித்த ராகு- கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 11ல் ராகுவும், 5 இல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 12இல்  சஞ்சரித்து, தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவ செலவினங்கள், முயற்சிகளில் தடை அந்த ராகு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும் அதனால் ஆதாயம் உண்டு. நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். திடீர் பணவரவு உண்டு. லாபம் பெருகும். கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. குழந்தைகளால் சங்கடங்களும் மனக்கசப்பும் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் உருவாகும். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்படும். மனக்குழப்பம் உண்டாகும். பொறுமை, நிதானம், விழிப்புணர்வு அவசியம். குலதெய்வம் மட்டும் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு, புதிய வியாபார முயற்சிகள் கைகூடும், இருப்பினும் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை உயரும், உரிய அங்கீகாரம் கிடைக்க தாமதமானாலும் நிச்சயம் உண்டு. பணிச்சுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர் மற்றும் பெற்றோரின் சொல்படி நடக்க வேண்டியது அவசியம். கலைத்துறையினருக்கு, திடீரென வாய்ப்புகள் உருவாகும். தற்போதுள்ள வாழ்க்கை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும் கிடைக்கும். இருப்பினும் உங்களைப் பற்றிய வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. மக்களை அணுகும் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.

பரிகாரம்: பரிக்கல்லில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்மை தரும்

கடகம்: (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

அரசியல் ஞானமும் ஆளுமை திறன் மிகுந்த கடக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 11 இல் சஞ்சரித்த ராகு பகவான் பலவகையில் லாபங்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பிரபலங்களின் அறிமுகத்தையும் நட்பையும், ஆசைகள் நிறைவேறுதலையும் தந்த ராகு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 10 – இல் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்து குழந்தைகளால் வீண் மன சங்கடத்தையும்,  குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பையும், தேவையற்ற மன குழப்பத்தையும் அந்த கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 4 இல் சஞ்சரிக்கிறார்கள்.  பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை தருவார். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். இருப்பினும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் தாய் மற்றும் உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள் மனக்கசப்புகள் உருவாகும். தாய் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீடு வாகனம் சொத்துக்களை சீர்படுத்த செலவினங்கள் அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் போது ஆவணங்களில் கவனம் தேவை. மன அமைதி குறையும். சுகம் கெடும். சிறு சிறு தடைகள், பிரச்சனைகள் வந்து நீங்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சுமூகமான சூழல் உருவாகும். வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வழிகளை யோசிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உயரதிகாரிகள் சாதகமாக மாறுவார்கள். மாணவர்களுக்கு, மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தியானம், யோகா பயில்வது நல்ல நினைவாற்றலை தரும். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.

பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதி திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கம்பீரமும் அதிகார தோரணையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 10 ல் பல அலைச்சல்களை, தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமையை, எதிலும் காலதாமதத்தை தந்த ராகுபகவான், தற்போது உங்கள் ராசிக்கு 9 இல் சஞ்சரிக்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு 4இல்  சஞ்சரித்து தாய் உடல் நிலையில் பாதிப்பு, உறவுகளால் மனக்கசப்புகள், காரியத்தடைகள், மன அமைதியின்மை, வாகனம் வீடு தொடர்பான வீண் விரயங்கள் தந்த கேது பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் 9-இல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் இதுவரை இருந்த தடைகள் பிரச்சினைகள் குறையும். பணிச்சுமை நீங்கும். சுதந்திர உணர்வு ஏற்படும். இருப்பினும் தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினைகள் அதிகரிக்கும். குரு மற்றும் மூத்தோரின் ஆசி பெறுவது நன்மை தரும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக  வெளிநாடு முயற்சிகள் கைகூடும். கேது பகவான் 3-ம் சஞ்சரிப்பதால் தாய் உடல்நிலை ஆரோக்கியம் அடையும். தடைகள் குறையும். உறவுகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தைரியம் உற்சாகம் பெருகும். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறப்புகள் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. எந்த சூழ்நிலையும் எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டு. இருப்பினும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு உயரும். சிறுசிறு தடைகள் வந்தாலும் எளிதில் எதிர்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். சம்பள விகிதம் உயரும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகும். தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

பரிகாரம்: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

கன்னி: (உத்திரம் 2 3 4-ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1 2ஆம் பாதம்)

தந்திரத்தால் எதையும் வெல்லும் கன்னி ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரித்து தம்பி உடல்நிலையில் பாதிப்பையும், தந்தையால் மனக் கசப்புகளையும், பிதுர்வழி சொத்துப் பிரச்சனையும் தந்த ராகுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு எட்டில் சஞ்சரிக்கிறார். அதேபோல் இதுவரை உங்கள் ராசிக்கு 3இல் சஞ்சரித்து தைரியத்தையும் தன்னம்பிக்கையையும், எதையும் சாதிக்கும் ஆற்றலையும், வாழ்வில் முன்னேற்றத்தையும், பிரபலங்களின் நட்பையும் தந்த கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 2 இல் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் 8 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் பிரச்சினைகள் வந்து நீங்கும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும், வீண் பழி, மறைமுகப் பிரச்சினைகள், சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்வதால் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் நிலை உருவாகும், வாகன பயணங்களில் கவனம்  தேவை, இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கேது பகவான் 2 இல் சஞ்சரிப்பதால் பேச்சில் அதிக கவனம் தேவை, குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது, பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும், சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு தேவை. ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் ராகு கேதுவின் தீய பலன்கள் குறையும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. வாடிக்கையாளர்களை கவனமாக கையாளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். தற்போதுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். மேடைப்பேச்சில் அதிக கவனம் தேவை. மக்களை நாசூக்காக கையாளுங்கள்.

பரிகாரம்:நாகப்பட்டினம் நீலமேகப்பெருமாள் கோயிலில் அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மரை புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

துலாம்: (சித்திரை 3, 4-ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2, 3 ஆம் பாதம்)

எதிலும் நிதானத்தைக் கடைப் பிடிக்கும் துலா ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 8-2 இல் சஞ்சரித்த ராகு கேது பகவான், உங்கள் ராசிக்கு ராகுபகவான் 7 லும், கேது பகவான் 1 லும் சஞ்சரிக்கிறார்கள். 8 ல் சஞ்சரித்த ராகு பகவான் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் பிரச்சனைகள், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் வம்பு வழக்குகள் ஆகியவற்றை ஏற்படுத்தினார், தற்போது ராகு பகவான் 7 ல் சஞ்சரிப்பதால் இது போன்ற தடைகள் பிரச்சினைகள் நீங்கும். இருப்பினும் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது, வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. நண்பர்களால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். 2 இல் சஞ்சரித்த கேதுபகவான் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வீண் வாக்குவாதங்கள், பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு, பேச்சால் பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தினார். தற்போது உங்கள் ராசியிலேயே ஜென்ம கேதுவாக சஞ்சரிக்கும் கேது பகவான் தேவையற்ற பிரச்சனைகள், மன குழப்பங்கள், வெறுப்பு, விரக்தி, காரியத்தடை, எதிர்காலம் பற்றிய பயம், எதிர்மறை சிந்தனைகளை தர வாய்ப்புள்ளதால் இதுபோன்ற விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சியே வெற்றி தரும் என்பதை உணரும் காலம் ஆகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா தியானம் பயில்வது நல்லது. ஆன்மீக ஈடுபாடு நன்மை தரும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வாடிக்கையாளர்களை நாசுக்காக கையாளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் டென்ஷன் அதிகரிக்கும். பணிகளைப் பிரித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. காதல் போன்ற விசயங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தற்போது உள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. மக்களை அணுகும்போது கவனமாக இருங்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் ஸ்ரீரங்கநாதரை வெள்ளிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்: (விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

மறைமுக ரகசியங்களை உணர்வதில் ஆர்வமுடைய விருச்சக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு  7 இல் சஞ்சரித்து குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்சினை போன்ற விஷயங்களை ஏற்படுத்திய ராகுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிக்கிறார். பொதுவாக ராகு பகவான் 6-ல் சஞ்சரிப்பது மிகுந்த நன்மையை ஏற்படுத்தி தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் பெருகும். புகழ் செல்வாக்கு அந்தஸ்து கூடும். பொருளாதார நிலை உயரும். இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்திலேயே ஜென்ம கேதுவாக சஞ்சரித்து மன குழப்பத்தையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும், விரட்டியும் வெறுப்பையும் தந்த கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கிறார். கேது பகவான் பனிரெண்டில் சஞ்சரிப்பதால், இருந்த பிரச்சினைகள் மனக்குழப்பங்கள் நீங்கும். மனம் தெளிவு பெறும், எதிர்மறை சிந்தனைகள் அகலும். தன்னம்பிக்கை பிறக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தான தர்மம் செய்வீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த ஆலயங்களுக்கு புனித யாத்திரை சென்று வருவீர்கள். நன்மைகள் பல நடக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உயரதிகாரி சாதகமாக மாறுவார்கள். உங்கள் அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த தன்மை நீங்கி கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் பெருகும். நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு இதுவரை இருந்த தடைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். நீங்கள் பிரபலம் அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை புரிந்து கொள்வார் தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும்.  மக்களிடம் செல்வாக்கு உயரும்.  புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: சிக்கல் சிங்காரவேலரை செவ்வாய்க்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

நீதி, நேர்மை, நியாயம் இவற்றில் அதிக பற்று கொண்ட ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 6,12 முறையே சஞ்சரித்த ராகு – கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ராகு- கேது பகவான் 5,11 இல் சஞ்சரிக்கிறார்கள். ராகு பகவான் 6-ல் சஞ்சரிக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு, எதிரிகளை வெல்லுதல், வழக்கு விஷயங்களில் சாதகமாக அமைதல், போட்டிகளில் வெற்றி, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்றவற்றை தந்த ராகு பகவான், உங்கள் ராசிக்கு 5 இல் சஞ்சரிப்பதால் குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுங்கள், திடீர் அதிர்ஷ்டமும் திடீர் இழப்பும் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்க்கவும். எதிலும் நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது.  கேது பகவான் 12-ல் சஞ்சரிக்கும் போது ஆன்மீகப் பயணங்கள், கோயில் திருப்பணி, மருத்துவ செலவினங்கள் போன்றவற்றை தந்த கேது பகவான் தற்போது ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி, நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம், பிரபலங்களின் நட்பு போன்றவற்றை ஏற்படுத்துவார். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டு. இருப்பினும் கூட்டாளிகளை கவனமாக கையாளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதைக் கூடும். இருப்பினும் முக்கியமான தருணங்களில் ஆலோசனையை ஆலோசனையை கேட்பது நன்று. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை காதல் விசயங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் தற்போது உள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விஷயத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. மக்களை கவனமாக கையாளுங்கள். பொறுமை நிதானம் விழிப்புணர்வு தேவை.

பரிகாரம்: குருவாயூரில் உள்ள குருவாயூரப்பனை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மகரம்: (உத்திராடம் 2ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்)

உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 5,11 முறையே சஞ்சரித்த ராகு கேது பகவான் , தற்போது உங்கள் ராசிக்கு 4, 10 சஞ்சரிக்கப் போகிறார்கள். 5ல் சஞ்சரித்து குழந்தைகளால் மனக்கசப்பு, பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு, பூர்வீக சொத்து பிரச்சினைகள், ஷேர் மார்க்கெட்டில் திடீர் இழப்பு, மனக்குழப்பம் தந்த ராகுபகவான், தற்போது உங்கள் ராசிக்கு  4 இல் சஞ்சரிப்பதால் இவைகள் அனைத்தும் நீங்கும். இருப்பினும் தாய் உடல்நலனில் கவனம் தேவை, தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் போது ஆவணங்களில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மன அமைதியை பெற யோகா தியானம் பயில்வது நன்மை தரும். 11 இல் சஞ்சரித்து காரிய வெற்றி, தனலாபம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, ஆசைகள் நிறைவேறுதல், அரசால் அனுகூலம் தந்த கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 10  இல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான செயல்களை செய்ய நீங்கள் இருந்து நீக்கப்படலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களைப்பற்றிய வதந்திகள் பரவ வதற்கான வாய்ப்புகள் உண்டு. கடமையை கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டியது அவசியம். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் பணியாட்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உங்கள் பணியில் சிரத்தையாக செயல்படுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. பொழுதுபோக்கில் இருந்து விலகி இருங்கள். பை கலைத்துறையினருக்கு தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய பொறுப்புகளில் கவனமாக இருங்கள். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவ தற்கான வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்: குச்சனூரில் உள்ள சனிபகவானை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

கும்பம்: (அவிட்டம்  3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்)

தன்னலம் மட்டுமே இல்லாமல் பொது நலமும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படும் கும்பராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 4, 10 முறையை சஞ்சரித்த ராகு கேது பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 3,9 முறையை சஞ்சரிக்கிறார்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4இல் சஞ்சரித்து தாய் உடல்நலனில் பிரச்சனை, தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள், வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள், ஆவண பிரச்சனைகள், மன அமைதியின்மை தந்த ராகுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 3 இல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனோ பலம் அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் பெருகும். எதையும் சாதிக்க முடியும் என்ற ஆற்றல் மேலோங்கும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. தங்க நகை ஆபரண சேர்க்கை உண்டு. அரசால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இதுவரை 10 இல் சஞ்சரித்து தொழில் மற்றும் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சனைகள், வியாபாரத்தில் முடக்கம், மதிப்பு மரியாதை குறைதல், உங்களைப் பற்றி தேவையற்ற வதந்திகளை இதுபோன்ற உங்களைப் பாடாய் படுத்திய கேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் இந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தந்தை உடல்நலனில் கவனம் தேவை தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் உருவாகும். பிதுர் வழிபாடு நன்மை தரும். மூத்தோர் மற்றும் குருவின் ஆசி பெறுவது நன்மை. வெளி நாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு தற்போது உள்ள வாய்ப்புகள் நன்மை உண்டு. புதிய வாய்ப்புகள் தேடிவரும். சம்பள விகிதம் உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் இருந்த மனத்தாங்கல் குறையும். சகாக்களின் ஆதரவு உண்டு. மக்களிடையே செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மீனம்: (பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 3-9 முறையை சஞ்சரித்த ராகு கேது பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 2-8 இல்  சஞ்சரிக்கப் போகிறார்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3 இல் சஞ்சரித்து மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகத்தையும், எதையும் வெல்லும் ஆற்றலையும், விடாமுயற்சியால் மிகப்பெரிய வெற்றியையும், ஆபரண சேர்க்கையும், அரசால் அனுகூலம் தந்தை ராகு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 2 இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இல்லையெனில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். பேச்சில் அதிக கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம். பேச்சால் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இதுவரை உங்கள் ராசிக்கு 9-இல் சஞ்சரித்து தந்தை உடல்நிலையில் பாதிப்பு, தந்தையுடன் கருத்து வேறுபாடு, நீர்வழி சொத்து பிரச்சனைகளை தந்த கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 8 இல் சஞ்சரிக்கிறார். தந்தை உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் பிரச்சனைகள் வந்து நீங்கும்.  வீண்பழி,  அவமானம் உருவாக வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. பொறுமை நிதானம் விழிப்புணர்வு மிக மிக அவசியம். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் பொறுமை தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது மிக மிக அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கல்வியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விஷயத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்லுங்கள். சகாக்களை கவனமாக கையாளுங்கள். மக்களை அணுகும்போது பேச்சில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

More articles

Latest article