லக்னோ:
உத்தரபிரதேச தேர்தலை ஒட்டி காங்கிரஸூம் சமாஜ்வாதி கட்சியும் குறைந்தபட்ச பொதுவான செயல்திட்டங்களை வெளியிட்டுள்ளன.
உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரண்டுகட்சிகளுக்கும் பொதுவாக உள்ள 10 செயல்திட்டங்களை இன்று வெளியிட்டன
லக்னோவில் இன்று நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவும் கூட்டாக அதை வெளியிட்டனர். அதில் இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்குதல், 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு உறுதிபடுத்துதல், விவசாயிகள் பயிர்கடன் ரத்து செய்தல், பயிர்களுக்கு நியாயமான விலை நிர்ணயித்தல்
குறைந்த விலையில் மின்சாரம் வழங்குதல், ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், நகர்ப்புற ஏழைகளுக்கு பத்துரூபாயில் ஒருவேளை சாப்பாடு, அரசு வேலையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, 11, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 10 லட்சம் ஏழை தலித், மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச வீடு, 6 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை ஆகிய 10 அம்சங்கள் அடங்கியிருந்தன.