ரஃபேல் விமான பேர ஊழல் விவகாரத்தில் தேச நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 2018 ம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டு வரும் ஷெர்பா என்ற தன்னார்வ அமைப்பு, தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் கொண்டு பிரெஞ்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது, இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

பிரெஞ்சு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் மகாத்மா காந்தி கூறிய, “உனக்குத் தெரிந்த உண்மையை உரக்கச் சொல், உங்கள் கருத்துக்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்றாலும், உண்மை உண்மைதான்” என்ற வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும், “ரஃபேல் ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல் நடந்திருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதை 2016 ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவரும் நிலையில், தற்போது இதுகுறித்த விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.