126 விமானங்கள் 72,000 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் ஆட்சியில் விலை பேசப்பட்ட ரபேல் விமானங்களை 36 விமானங்கள் 69,000 கோடி ரூபாய் என்று பேரம் பேசி மோடி அரசு மறு ஒப்பந்தம் செய்த விவகாரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு செய்திருக்கும் குளறுபடிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று 2016 ம் ஆண்டு எழுந்த கோரிக்கையை நீதிமன்றம் அப்போது நிராகரித்தது.

இந்நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது மீடியா பார்ட் என்ற பிரெஞ்ச் புலனாய்வு இதழ்.

மீடியா பார்ட் இதழில் வந்த ஆதாரங்களைக் கொண்டு தற்போது மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல்ஸ் நிறுவனத்தை நீக்கிவிட்டு டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட புதிய ஒப்பந்தம் குறித்து இந்திய பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பே அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததற்கான ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஒப்பந்தம் கையெழுத்தான போது முன்னாள் அதிபர் ஹோலண்டே தலைமையிலான பிரான்ஸ் அரசில் நிதி அமைச்சராக இருந்தார் என்பதும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜீன்-யவ்ஸ் லே ட்ரின் இப்போது மக்ரோன் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார்.

நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் பிரதமர் மோடி மற்றும் அதிபர் மக்ரோன் இருவருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.