டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்து உள்ளது.

பொதுவாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும்.  அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்குகிறது.

20 அமா்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்தகூட்டத்திதொடரில் கலந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,   நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படும் , 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாகவும், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு மேலும் பலர் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல,  நாடாளுமன்றத்துக்கு செய்தி சேகரிக்க வரும் செய்தியாளா்களுக்கும் மக்களவைச் செயலகம் சாா்பில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தொடரில், கொரோனா தடுப்பூசி, விவசாயிகள் பிரச்சினை, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற விவகாரங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.