சென்னை:

ராதாபுரம் தொகுதியில் நாளை மறு வாக்கு எண்ணிக்கைக்கூடாது என்று  அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம், நாளை மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறியது.

கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் இன்பதுரை. திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார்.  தேர்தலில் இன்பதுரை 69,596 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றிருந்தனர். 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது

அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தபால் வாக்குகளில் 203 வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்தது தெரியவந்தது. அந்த வாக்குகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணை யத்திற்கு உத்தரவிட வேண்டும் என அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி  உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை அவசர மனுவாக ஏற்க மறுத்து விட்டதைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அதில்,  மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்று கூறி இன்பதுரை தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.

ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளின் மறு எண்ணிக்கை நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்றும்  உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.