போலி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதில் துவங்கி ப்ளூ-டூத் பயன்படுத்தி தேர்வு எழுதுவது வரை பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறிவருவது நாடறிந்த விஷயம்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் தேர்வுகளை எழுதி அதிகமதிப்பெண் பெறுவதில் தற்போது புதுவிதமாக வெளிநாட்டு ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ள விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.இ.இ., ஜிமேட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள முதல் தர கல்வி நிலையங்களில் சேர முடியும்.
இந்த நுழைவு தேர்வுகளை எழுதுவதற்கும் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டுவதற்கும் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மும்பையைச் சேர்ந்த அர்ஷத் துன்னா, சல்மான் துன்னா மற்றும் ஹேமல் ஷா ஆகியோர் அதிக மதிப்பெண் பெற மாணவர்களுக்கு வழிகாட்டுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வேறு சில நகரங்களில் உள்ள நபர்களுடன் இணைந்து கூட்டாக நடத்தப்படும் இந்த போலி பயிற்சி நிறுவனம் மூலம் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் 800 க்கு 780 மதிப்பெண்கள் பெற்று உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்றுவந்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, டெல்லி போலீசின் இன்டெலிஜென்ஸ் பியூசன் அண்டு ஸ்ட்ராட்டஜிக் ஆபரேஷன் (IFSCO) பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் போலியான விவரங்களுடன் நுழைவு தேர்வு எழுதுவதற்காக இந்த கும்பலை தொடர்பு கொண்டிருக்கிறார்.
சம்பந்தப்பட்ட நுழைவு தேர்வு எழுதும் போது தாங்கள் கொடுத்த அல்ட்ரா-வியூவர் (Ultraviewer) என்ற மென்பொருளை கணினியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம், தேர்வு எழுதும் நபரின் கணினி வெளியில் இருந்து இயங்கும் மற்றொரு நபரின் கட்டுப்பாட்டில் செல்வதுடன், அது வெளியில் இருந்து இயங்குவது போல் தெரியாமல் இருக்க மென்பொருளில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.
அவ்வாறு அந்த போலீஸ் அதிகாரியின் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்தி ரஷ்யா-வில் உள்ள ஹேக்கர்கள் அந்த நுழைவுத் தேர்வை எழுதியதில் அவருக்கு 800க்கு 780 மதிப்பெண்கள் கிடைத்தது.
இதனை ஆதாரமாகக் கொண்டு மும்பையைச் சேர்ந்த அர்ஷத் துன்னா, சல்மான் துன்னா மற்றும் ஹேமல் ஷா தவிர டெல்லியைச் சேர்ந்த குணால் கோயல், மற்றும் ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்த மோஹித் சர்மா மற்றும் ராஜ் தியோட்டியா ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இவர்களிடம் நடைபெறும் விசாரணையின் முடிவிலேயே ரஷ்ய ஹேக்கர்கள் மீதான சர்வதேச நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
நுழைவு தேர்வுகள் தேவையா என்ற சர்ச்சை இந்தியாவில் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில் அதில் வெற்றி பெற சர்வதேச ஹேக்கர்களை கொண்டு செயல்படும் சதி கும்பல் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.