சென்னை:
கடந்த 18ந்தேதி இரவு போர்சே எனும் வெளிநாட்டு கார், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோகளை பயங்கரமாக இடித்து தள்ளி நசுக்கியது. டில்லி பதிவு எண் கொண்டது அந்த கார். பிரபல உயர்நீதி மன்ற வழக்கறிஞர் விஜய்ஆனந்த் என்பவரின் மகனும், பிரபல ரேஸ் வீரருமான விகாஸ் ஆனந்த் என்பவர் ஓட்டி வந்தபோதுதான் இந்த பயங்கர விபத்து நடைபெற்றதாக சொல்லப்பட்டது.
இந்த விபத்தில் 12 ஆட்டோ ஓட்டுநர்கள் காயம் அடைந்தனர். அதில் 29 வயதான ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
காரில் இருவர் இருந்தனர். காரில் இருந்த இருவரும் காற்றுப்பைகளின் பாதுகாப்பினால் காயமின்றி தப்பிவிட்டார்கள்.
ஒருவர் விகாஸ் ஆனந்த், மற்றொருவர் அவரது நண்பர் சரண்குமார். இவர் ஆட்டோமொபைல் ஷோரும் நடத்தி வருகிறார்.
சம்பவம் நடைபெற்றபோது விகாஸ்தான் கார் ஓட்டி வந்ததாக முதலில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐபிசி செக்ஷன் 337 (செயல் மூலம் காயம் ஏற்படுத்துதல் அல்லது மற்றவர்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்) மற்றும் 304a ( அலட்சியமாக நடப்பதன் மூலம் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது) ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விகாஸ் தனது ஜாமின் மனுவில், “ நான் காரை ஓட்டவில்லை. பின்னால் இருந்தேன்” என்று கூறப்பட்டுள்ளார். விபத்து ஏற்படும்போது, அதே காரில் இருந்த இன்னொருவரான சரண்குமாரும் தனது ஜாமின் மனுவில், “நான் காரை ஓட்டவில்லை. விகாஸ்தான் ஓட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.
சரண்குமாருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பி.குமார் “விகாஸ் பெட்டிசனில் என்ன சொல்லியிருக்கிறார் என தெரியாது” என்று தெரிவித்துள்ளார். இவர் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு சம்பந்தமாக கர்நாடக கோர்ட்டில் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விகாஸ், தனக்கு வயிற்றுவலி என்று சொன்னதால் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“ஆக, விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த இருவருமே தாங்கள் இருவரும் காரை ஓட்டவில்லை என்கிறார்கள். அப்படியானால் கார், தானாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதா? ஏற்கெனவே 2002- ஆம் ஆண்டு மதுபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்படார். இந்த வழக்கும் அதை நோக்கிச் செல்கிறதோ” என்ற கவலை சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.