இயக்குனர் பாலா தயாரிப்பில் பத்மகுமார் இயக்க, ஆர் கே சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் படம், விசித்திரன்.

தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும், உடல் உறுப்பு மாற்று மோசடி, ஏழை மக்கள் ஏமாற்றப்படுவது குறித்து அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி இருக்கும் படம் இது.

இதையடுத்து அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

பிக் பாஸ் பிரபலங்கள், பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், தாமரை, ஜூலி, விஜய் டிவி பிரபலம் பாலா, நடிகர் ஷா ரா, கணேஷ், நடிகைகள் இந்திரஜா ரோபோ ஷங்கர், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் விசித்திரன் படத்தைப் பார்த்தனர்.

பிறகு, “மக்களுக்கு மிக அவசியமான கருத்தை, மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம் இது. மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் இது என்பதே தெரியவில்லை. மலையாளத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜ் போலவே ஆர்.கே.சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார்.

மருத்துவ மாஃபியாக்கள் குறித்த இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்த்து விழிப்புணர்வு அடைய வேண்டும்” என்றார்கள்.

படத்தில் நடித்துள்ள பூர்ணா, “ஜோசப் ஒரு ஹீரோ படம், அதையே விசித்திரனிலும் உணர முடிந்தது. ஆர் கே சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார். பல காட்சிகளில் நான் இருந்ததால் அவருடைய நடிப்பையும் பார்த்திருக்கிறேன். சில சென்டிமென்ட் காட்சிகளில் அவரது நடிப்பைப் பார்த்து நான் அழுதுவிட்டேன். ஆர்.கே.சுரேஷ் நடிப்பு இந்த படத்திற்கு ஒரு பெரிய முதுகெலும்பாக இருந்தது. இயக்குனர் எம். பத்மகுமார் படத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார்” என்றார்.

இறுதியாக பேசிய ஆர் கே சுரேஷ், “மலையாள ஜோசப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் உட்சபட்ச நடிப்பை அளித்துள்ளார், நான் முயற்சி செய்திருக்குறேன். ஆகவே இருவரையும் ஒப்பிட வேண்டாம்.

பட இயக்குனர் எம்.பத்மகுமார், தயாரிப்பாளர் பாலா, இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் என பட உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.

சக நடிகை பூர்ணா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவர், நயன்தாராவைப் போல் பிறவிக் கலைஞர்” என்றார் ஆர்.கே.சுரேஷ்.