“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால், குழந்தைகளுக்கு மீண்டும் ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான ‘கிரீமி லேயர்’ இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகரத்னா கூறியதாவது:

கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் கிடைத்தால் சமூக முன்னேற்றமும் ஏற்படும். அப்படியிருக்க, ஏற்கனவே முன்னேறிய குடும்பங்களின் அடுத்த தலைமுறையும் தொடர்ந்து இடஒதுக்கீடு கோருவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர் நல்ல வேலை, உயர்ந்த வருமானம் பெற்ற நிலையில், குழந்தைகளும் மீண்டும் இடஒதுக்கீடு கேட்பது சரியா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம். ஒரு கட்டத்தில் அவர்கள் இடஒதுக்கீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.

உயர்ந்த நிலையை அடைந்த சில பிரிவினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கும் வகையில் ஏற்கனவே அரசு உத்தரவுகள் உள்ளன. தற்போது அந்த விலக்குகளையே எதிர்த்து வழக்குகள் தொடரப்படுகின்றன. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கான EWS இடஒதுக்கீடும், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் வேறுபட்டவை. EWS-ல் சமூக பின்னடைவு கிடையாது; பொருளாதார பின்னடைவு மட்டுமே உள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய தரப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

[youtube-feed feed=1]