கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற கூட்டம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மழைக் காலக் கூட்டத்தொடர் தொடர்ச்சியாக 18 நாட்கள் டைபெறும் என்றும், கூட்டத்தொடரின் முதல்நாள் தவிர, மற்ற நாட்களில் மாநிலங்களவை காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மக்களவை பிற்பகல் 3 மணி முதல் 7 மணிவரை நடைபெறும். இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் நாடாளுமன்றம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலுமே முழுமையாக கேள்வி நேரத்தைத் ரத்து செய்தும் அறிவித்துள்ளது. இந்த தொடரில் கேள்வி நேரமோ, தனிநபர் மசோதாவோ கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப ஒரு நாள் முன்னதாகவே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்றச் செயலகம் உறுப்பினர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது எதிர்க்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேள்வி நேரத்தை முழுமை யாக ரத்து செய்வது எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட் பதிவில், “இதுவரை இல்லாத இந்த பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில், வெளிப்படையான தகவல்களை குடிமக்கள் அறிந்துகொள்ள கேள்வி நேரம் மிக முக்கியமானது.
கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சி களின் பங்களிப்பை நசுக்குவதாகும். இம்முடிவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.