சென்னை: குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது, இன்னும் இரு நாட்களில் அவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான வழக்கு  அக்டோபர் 07ந்தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், கடந்த 1995-ம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்குக் குத்தகைக்கு விட்டதாகவும், அதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர், கோயில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால், இதைப் பயன்படுத்திக்கொண்டு, குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக இந்த நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் குத்தகைக் காலம் 1998ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் என அரசுக்கு  உத்தரவிட்டனர். மேலும், அந்த நிறுவனம் வருவாய்த்துறைக்கு 1 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 ரூபாயையும், அதேபோல் கோயிலுக்கு 9.5 கோடி ரூபாயையும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்த நிலம் மீட்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும், அந்த நிலம் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது என்று சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.