சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்நதுள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் கக்கன்தீப் சிங்பேடி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராணி மேரி கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர், “ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொள்வதி லும், இங்கு நடத்தப்பட்ட, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலும் மிக்க மகிழ்ச்சி யடைகிறேன். இக்கல்லூரி மாணவிகளின் ஆர்வத்தைப் பாராட்டும் வகையிலும், அவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இங்கு பயிலும் 5,500 மாணவிகள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்காக இந்த கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் சுகாதாரத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
இந்தக் கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகளில் 3800 மாணவிகள் இரண்டு தவணை தடுப்பூசியும், 800 மாணவிகள் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களும் இந்தத் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கல்லூரி என்கிற நிலையை ராணி மேரி கல்லூரி ஓரிரு நாட்களில் அடைந்துவிடும். இதற்காக கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் ஒமிக்ரான் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், நைஜீரியா நாட்டிலிருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் மரபியல் மாற்றம் இருந்தது. அவருடன் தொடர்புடைய உறவினர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில் 6 நபர்களுக்கு மரபியல் மாற்றமும் கண்டறியப் பட்டதால் இந்த 7 நபர்களின் தடயவியல் மாதிரிகள் ஒமைக்ரான் வகை தொற்றா எனக் கண்டறிய பெங்களூருக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் நிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அதன்படி, இதுவரை 12,039 நபர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளிலிருந்து 63,411 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 2 சதவீதம் நபர்களுக்கு, அதாவது 1,834 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 36 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் மீண்டும் ஆய்வு செய்வதற்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவது மற்றும் 18 வயதிற்குக் கீழ் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் முடிவினைப் பொறுத்து முறையான வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.