சென்னை:  கொரோனாவின் பிறழ்வு வைரசான ‘ஒமிக்ரான்’ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும், தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம் எழுதி உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து  பரவத்தொடங்கிய  ஒமிக்ரான் தொற்று இந்தியா உள்பட உலகின் 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 61ஆக அதிகரித்து உள்ளது. இதையடுத்து மாநிலஅரசுகள் தடுப்பு நடவடிக்கைளை தீவிரமாக கண்காணிக்க மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டிலும் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஒமிக்ரான் பரவலை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் எழுதிஉள்ளார்.

அதில், ஒமிக்ரான் பரவலை  எதிர்கொள்ள பொது மக்கள் பொருத்தமான நெறிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியமானதாகும். இதையொட்டி அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின் பற்ற அதிகாரிகளின் கண்காணிப்பும் அவசியமாகிறது.

பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முககவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைபிடிப்பது மிகவும் குறைந்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. இதை கண்காணித்து, அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும்.

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தன்னார்வலர்கள் உதவியுடன், முக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை உருவாக்க தீவிர பிரசாரமாக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுமாறு வலியுறுத்த வேண்டும். இதே போல் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளவர்களையும் தடுப்பூசி போட வைக்க வேண்டும்.

மருத்துவமனைகளில்,  படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐ.சி.யு. வார்டுகள், வென்டிலேட்டர், தேவையான மருந்து- மாத்திரைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா நோயாளிகள் குறைந்து விட்டதால் ஆஸ்பத்திரிகளில் பல வார்டுகளில் படுக்கைகள் காலியாக இருக்கும். எனவே அந்த படுக்கைகளை சுத்தம் செய்து புதுப்பித்து வைக்க வேண்டும்.

இதன் மூலம் கொரோனா அல்லது உருமாறிய கொரோனா (ஒமைக்ரான்) பரவாமல் தடுக்க முடியும்.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவி விட்டதால் தமிழகத்தில் நாம் எடுக்கும் முன்னேற்பாடுகள் பீதியை உண்டாக்குவதாக அர்த்தம் கிடையாது.

மற்ற நாடுகளில் மிக வேகமாக ஒமைக்ரான் பரவியதால் உலக சுகாதார நிறுவனம் மேற்கோள் காட்டிய கருத்தின் அடிப்படையிலேயே அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் முழுமையாக பின்பற்ற தமிழகத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

யாருக்கும் கொரோனா பரிசோதனையில் வேறு நோய் அறிகுறி சந்தேகம் ஏற்பட்டால் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சம்பந்தப்பட்ட நபரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். இது மேலும் நோய் பரவாமல் தடுக்க ஏதுவாக இருக்கும்.

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டபடி மத்திய அரசிடம் இருந்து அவ்வப்போது வரும் விமான நிலைய பரிசோதனைகள், வழிகாட்டுதல் நெறிமுறைகளை எந்தவித தொய்வும் இன்றி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இதுதொடர்பாக அனுப்பப்பட்ட முந்தைய சுற்றறிக்கைகளுடன் கூடுதலாக இந்த அறிவுறுத்தல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.