கோவை:
ந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். தற்போது ஓட்டல்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கையில் பணத்தை எடுத்து செல்வது கிடையாது. கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணத்தை செலுத்தி வருகின்றனர்.

அனைத்து கடைகளிலும் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்காரர்களுக்கு சில்லரை மீதி கொடுப்பது போன்ற பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளன.

இதுவரை கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பேருந்து ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பேருந்துக்கு நிகராக எண்ணற்ற தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

பேருந்துகளில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது. அப்படி கொடுப்பவர்களுக்கு, சில கண்டக்டர்கள் மீதி சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலர் சரியான சில்லறை எடுத்து வர வேண்டியதானே என கடிந்து கொண்டாலும் சில்லறையை கொடுத்து விடுவார்கள்.

இதனால் அனைத்து பேருந்துகளிலும் சில்லறை பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருக்கும். இதன் காரணமாக பல நேரங்களில் பெரிய அளவிலான தகராறுகள் கூட ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதற்கு எல்லாம் ஒரு தீர்வு காணும் விதமாக கோவையை சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்த 5 பேருந்துகளிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.

3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பேருந்துகளில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.

இதுகுறித்து தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் கூறுகையில், பேருந்துகளில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

உடனே ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பேருந்துகளிலும் ஒட்டினோம்.

இதனால் பேருந்துசில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பேருந்தில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கென ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது.

மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.

கோவையில் முதல் முறையாக தனியார் நகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், இதுபோன்ற மற்ற பேருந்துகளிலும் செய்தால் நன்றாக இருக்கும் என கூறினர்