சென்னை:

அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு இருந்தால், ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வேலூர் மாவட்டம் காட்பாடியில் 42 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி, தமிழக அரசுக்கு விஐடி பல்கலைக்கழகம் விண்ணப்பித்தது.

அதே பகுதியில், ஏற்கெனவே விஐடிக்கு 98 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி, விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விஐடி பல்கலைக்கழக நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, விளையாட்டு மைதானம் அமைக்க, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அந்த நிலம் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தமது தீர்ப்பில கூறியயதாவது:

விஐடி பல்கலைக்கழகம் கோரிய நிலம் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலம். அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறல்களும் இல்லை. மாநிலம் முழுவதும் அரசு புறம்போக்கு நில ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

அதில் முறைகேடு ஏதும் தென்பட்டால், அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இது குறித்து மார்ச் 4-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.

புறம்போக்கு நிலத்தை ஒதுக்குமாறு தனியார் நிறுவனங்கள் உரிமை கோர முடியாது. அதேபோல், அரசும் இஷ்டம்போல் நிலத்தை தனியாருக்கு ஒதுக்க முடியாது.

பொதுமக்கள் நலனுக்கும், அரசியல் சாசன கொள்கைகளுக்கும் முரணாக அரசின் கொள்கை முடிவுகள் இருந்தால், அவை அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என அறிவிக்கப்பட வேண்டும். கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு உரிமை இருந்தாலும், அவை  மாறும்போது, நீதித்துறை தலையிட முடியும்.

லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு, அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்வது ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களை பாதிக்கும். எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல், நிலங்களை ஒதுக்கீடு செய்ய விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

விஐடி பல்கலைக்கு புறம்போக்கு நிலம், ஒதுக்க மறுத்தது சரி என நீதிமன்றம் தீர்ப்பு, VIT can not claim gov land