
சென்னை
சென்னை புழல் சிறையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை தவறாகப் படித்து விட்டு ஒரு கைதியை விடுதலை செய்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த மாங்கா ரவி என அழைக்கப்படும் ரவிச்சந்திரன் கடந்த வருடம் ஜீவா என்பவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவருடைய கூட்டாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்ட ரவி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதனால் காவல்துறை ஆணையர் அவரையும் அவர் கூட்டாளிகள் உள்பட 14 பேரையும் குண்டர் சட்டத்தில் கடந்த டிசம்பர் 23 அன்று ஒரு வருடம் சிறையில் அடைத்தார். அதை எதிர்த்து ரவி நீதிமன்ற தீர்ப்பாயத்தில் முறை இட்டார். அதை விசாரித்த தீர்ப்பாயம் அவருடைய முறையீட்டை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை தீர்ப்பாயம் புழல் சிறைக்கு அனுப்பியது.
அந்த உத்தரவை புழல் சிறை அதிகாரிகள் சரிவரப் படிக்காமல் ரவியை விடுதலை செய்துள்ளனர். தனது விடுதலை குறித்து ரவிக்கே சந்தேகம் இருந்த போதும் அவர் ஏதும் சொல்லாமல் சிறையை விட்டு சென்று விட்டார். அவர் சுதந்திரமாக வெளியே உலாவி வருவதைக் கண்ட எதிர்த்தரப்பினர் அவரைக் கேள்விகள் கேட்டுள்ளனர். அவரும் தன்னை தீர்ப்பாயம் விடுவித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ரவியால் கொல்லப்பட்ட ஜீவாவின் வழக்கறிஞர் இந்த தகவலை அறிந்தார். அவர் இது குறித்து தீர்ப்பாயத்தில் விசாரித்துள்ளார். அப்போது ரவியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லும் என சிறைக்கு தீர்ப்பாயம் உத்தரவு அனுப்பியது தெரிய வந்தது. அதை அடுத்து வழக்கறிஞர் ரவியின் விடுதலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
அதன் பிறகே தாங்கள் தவறுதலாக ரவியை விடுதலை செய்தது சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பதறிய அதிகாரிகள் ரவியை உடனடியாக கைது செய்து சிறைக்கு அனுப்ப காவல்துறை உதவியை நாடி உள்ளனர். ரவியை விடுதலை செய்ததற்காக பிரதீப் என்னும் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
[youtube-feed feed=1]