சென்னை: புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
தொடர் மழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்து, போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை அருகே உள்ள புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். தற்போது ஏரியின் நீர் இருப்பு 20.31 அடியை எட்டியது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால்,. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 400 கனஅடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீரானது, நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், மஞ்சம்பாக்கம், மணலி, எண்ணூர் வழியாக கடலுக்கு செல்கிறது.
இதனால் ஆற்றின் கரையோரம் இருக்கும் மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில் பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 2.916 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 609 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3285 கன அடியாக உள்ளது.
தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
அடுத்த சில நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஏரிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீர் வரத்திற்கு ஏற்றார் போல வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.