சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு நந்தம்பாக்கத்தில் உள்ள டிரெட் சென்டரில் ரியல் எஸ்டேட்துறை (கிரெடாய்) கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது, புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் கிரெடாய் ஃபேயர் புரோ என்ற பெயரில் ரியல் எஸ்டே துறையினரின் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி 3 நாள் நடைபெற உள்ளது. அதன்படி, இன்று முதல் 16ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்ர் ஸ்டாலின், “பொருளாதாரம், தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நகர வளர்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும்” “சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை” “செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டம்” “சென்னை தீவுத்திடலில் உலக தரத்தில் பொருட்காட்சி மையம் அமைக்க திட்டம்” “தொழில்துறையினரின் கோரிக்கைகளை கிரெடாய் நிறைவேற்ற வேண்டும்” என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.
நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சி ஆகியவற்றை கொண்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை, மதுரை, ஓசூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட 136 நகரங்களுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரைக்கான முழுமை திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும்.
சென்னை மாநகர முதல் மற்றும் 2-ம் முழுமை திட்டம் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர வழிநடத்தப்போவது சென்னையின் 3-வது முழுமை திட்டம்தான்.
சென்னையை சுற்றியுள்ள மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரம்புதூர், பரந்தூர் பகுதிகளுக்கு புதுநகர வளரச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையம் அடுத்தாண்டு திறக்கப்படுகிறது.
மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் அனைத்து வசதிகளையும் அரசே செய்து தர முடியாது. கிரடாய் அமைப்பு ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவர் களையும் அரசையும் இணைக்கும் பாலமாக உள்ளது. மாநில மக்கள் தொகையில் 48 சதவீதம் மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.
தமிழ்நாடு மிகவும் நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. மாநில வளர்ச்சியை பிரதிபலிப்பது கட்டடங்களே. கிளாம்பாக்கம், மாதவரம், புத்தம்பாக்கம் 3 புதிய புறநகர் பேருந்து நிலையம் உருவாக்கி இருக்கிறோம். புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.