சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எந்த உறுதியும் அளிக்காத நிலையில், அதிமுக கூட்டணியின் பிரசாரத்தின்போது, தங்களது கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதாக புதிய தமிழகம் சார்பில் தேர்தல் ஆணையத் தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்றிருந்தது. ஆனால்,  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தான் கிருஷ்ணசாமி போட்டியிட மறுத்து தனி சின்னத்தில் தான் போட்டியிட்டார். இதன் காரணமாக கூட்டணி இழுபற்றியான நிலையில், இறுதியில் அமித்ஷா தலையிட்டு கூட்டணியை உறுதி செய்தார்.

இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக புதிய தமிழகம் எந்த முடிவும் அறிவிக்கவில்லை.

நாங்குநேரி தொகுதியில் கிருஷ்ணசாமியின் ஆதரவை பெற அதிமுக முயற்சித்தது. அமைச்சர்கள் கிருஷ்ண சாமியை சந்தித்து பேசிய நிலையில், அவர் ஆதரவு அளிக்க முடியாது என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.  7 பிரிவு களை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளராக அரசாணை வெளியிடக்கோரியதை அதிமுக அரசு ஏற்காத நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாங்குனேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது கூட்டணி கட்சியினரின் கொடிகள் காணப்பட்ட நிலையில், ஆதரவு அளிக்காத புதிய தமிழகம் கட்சியின் கொடியும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை காரணமாக, அதிமுக புதிய தமிழகம் இடையே உள்ள தேர்தல் கூட்டணி உடைந்துவிட்டது நிரூபணமாகி உள்ளது.