திருமலை: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் புரட்டாசி  பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்குகிறது. இந்த விழா 9 நாட்கள் விமர்சையாக நடைபெறும். இதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலி ஜொலிக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று  (3ம் தேதி) அங்குரார்ப்பணம் எனப்படும் முளைப்பாரி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து  இரவு  7 மணிக்கு ஏழுமலை யானின் சேனாபதியான விஸ்வக்சேனாதிபதி வீதியுலா நடைபெறும்.  இதனைத் தொடர்ந்து விஸ்வக்சேனர் 4 மாட வீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிடுவார். அன்று மாலை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளனர். பின்னர், பிரம்மோற்சவத்தின் முதல்நாள் இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

விழா தொடக்க நாளான  நாளை ( அக்டோபர் 4ம் தேதி )மாலை 3 மணியளவில் கருட உருவம் பொறித்த பிரமோற்சவ கொடியை விஸ்வக்சேனாதிபதி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோர் யானைகள் அணிவகுப்புடன் வீதியுலா நடைபெறும்.

அதன்பின்னர் கோயில் தங்க கொடிமரத்தில் மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடி ஏற்றப்படும்.

நாளை இரவு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். தொடர்ந்து முதல் உற்சவமாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி நடைபெறும்.

2வது நாளான 5ம் தேதி  காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும்,

3வது நாளான  (6ம் தேதி) காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும்,

4வது நாளான  (7ம் தேதி) காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு சர்வபூபால வாகனத்திலும் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் பவனி நடைபெறும். அதன் தொடர்ச்சியாக

5 வது நாளான  (8ம் தேதி) காலை மோகினி அலங்காரத்தில் சுவாமி பவனி நடைபெறும். அன்றிரவு பிரமோற்சவத்தின் முக்கிய சேவையான கருடசேவை உற்சவம் நடைபெறும்.

6வது நாளான  (9ம் தேதி) காலை அனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு யானை வாகன பவனி நடைபெறும்.

7வது நாளான  (10ம் தேதி) காலை சூரிய பிரபை வாகன உற்சவம், இரவு சந்திர பிரபை வாகன உற்சவத்திலும் ஏழுமலையான் பவனி நடைபெறும்.

8வது நாளான (11ம் தேதி) காலை மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடக்கிறது. அன்றிரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெறும்.

9 வது நாளான  (12ம் தேதி) காலை புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடைபெறும்.

அன்றைய தினம் கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.  திருப்பதி மற்றும் திருமலையில் வண்ண விளக்குகள், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவை கண் கவரும் விதத்தில் உள்ளதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருப்பதியில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம், தேவஸ்தான நிர்வாக அலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச்சாலைகளிலும், திருச்சானூர்-திருப்பதி சாலை, சித்தூர்-திருப்பதி சாலைகளிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், அலிபிரி நுழைவு வாயில் உட்பட மலைப்பாதை, நடைபாதை, திருமலையில் மாட வீதிகள், கோயில் கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் அலங்கார தோரணங்கள், கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் திருப்பதி, திருமலை மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. ஆந்திர அரசு சார்பில் நாளை (அக். 4) முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்ளார்.

பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவிற்கு 5,140 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.