சென்னை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இன்று, புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால், கூட்டம் மோதி வருகிறது. இதனால் ஏழுமலை யானை தரிசிக்க 48மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் மிலாடி நபி, காந்தி ஜெயந்தி மற்றும் சனி ஞாயிறு என தொடர் விடுமுறை வந்துள்ளால், திருப்பதி வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால், ஏழுமலையான தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.  இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள், வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் இருந்து ரிங் ரோடு, நாராயணகிரி ஷெட், சீலா தோரணம் தாண்டி சுமார்  4 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்துநின்றனர்.  இவர்கள் ஏழுமலையான தரிசிக்க குறைந்த பட்சம் 24மணி நேரம் முதல் அதிகபட்சம் 48மணி நேரம் ஆவதாக கூறப்படுகிறது. அதுபோல, ஏழுமலையான பிரசாதமான லட்டு பிரசாரங்களை வாங்க  பிரசாத லட்டு கவுண்டர்களிலும்பல மணி நேரம் காத்திருந்து லட்டு வாங்கிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், ஏற்கனவே ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்த  பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிவதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.   இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள்தான்  சுமார் 40 முதல் 48 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது புரட்டாசி மாதம் என்பதால், நடைபயணமாக வரும் பக்தர்கள் வசதிக்காக, மலைப்பாதை,  இரவு 12 மணி முதல் 2 மணி வரை மட்டும் நடைபாதை மூடப்படுகிறது. முன்பு போல் பக்தர்கள் நடை பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 66, 233 பேர் தரிசனம் செய்தனர். 36,486 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.