சென்னை: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், ஏழுமலையான தரிசிக்க சுமார் 24மணி நேரம் முதல் 36மணி நேரம் வரை ஆவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் வருடத்தில் 6வது மாதமான புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார். புதன் விஷ்ணுவின் அம்சமாக பார்க்கபடுகின்றார். சைவப் பிரியரான புதன் பகவான் புரட்டாசி மாதத்தில் ஆட்சி செய்வதால், இந்த மாதம் நாம் சைவம் சாப்பிடுவது சிறந்தது.
நாம் ஒவ்வொரு வாரமும் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிக்கும் போது கிடைக்கும் பலனை, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது நன்மையைத் தரும் அறிவியல் ரீதியாகவும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருப்பதால், உடல் நல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம் என விளக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு விரதமாக இருந்தாலும், தான தர்மமாக இருந்தாலும், சரி நம்மால் முடிந்த அளவுக்கு செய்வது நன்மை தரும். இந்த அளவு பொருள் செலவு, இந்த அளவு பிரமாண்டமாகச் செய்ய வேண்டும் என்பது இல்லை. நம்மால் இயன்ற அளவு சிறப்பாக செய்தாலே தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது ஐதிகம்.
இன்று புரட்டாசி மாதத்தின் 3வது சனிக்கிழமையையொட்டி, நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பலமணி நேரம் காத்திருந்து பெருமாளை சேவித்து, ஆசி பெற்று செல்கின்றனர்.