மும்பை: பஞ்சாப் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில், இறுதிவரை போராடிய ராஜஸ்தான் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி சதமடித்தார். மொத்தம் 63 பந்துகளை சந்தித்த சஞ்சு, 7 சிக்ஸர்கள் & 12 பவுண்டரிகளுடன் 119 ரன்களை அடித்து துவைத்தார். ஆனாலும் அவரால் அணியை கரைசேர்க்க முடியவில்லை.
கடைசிவரை களத்தில் நின்று மிரட்டிய அவர், கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு, கேட்ச் ஆகி அவுட்டானார். கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸர் அடித்தார். அந்த அணியில், அவருக்கு அடுத்து எடுக்கப்பட்ட பெரிய ரன்கள் 25 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்து, 4 ரன்களில் தோற்றது.
கடந்த ஐபிஎல் தொடரில், இப்படியான ஒரு லீக் போட்டியில், பஞ்சாப் அணி, இதேபோன்று 200 ரன்களுக்கு மேல் அடிக்க, அதை ராஜஸ்தான் அணி எளிதாக சேஸ் செய்து பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அப்போதும் இதே சஞ்சுதான் புரட்டி எடுத்தார். ஆனால், இந்தப் போட்டியிலும் அவர் மிரட்டியபோதும், அணியில் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தால், வெறும் 4 ரன்களில் தோல்வியை தழுவ நேரிட்டுள்ளது.