சண்டிகர்: மத்திய மோடி அரசு விதித்துள்ள ஊரடங்கால், பஞ்சாப் மாநில அரசுக்கு மெத்தம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் ரூ.50000 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலைப்பட தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், ஒவ்வொரு மாதமும் ரூ.3000 கோடியை அரசு இழந்து வருகிறது. அரசின் வருவாய்க்காக விரிவிதிப்பு குறித்து சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் தன்னை ஒரு மிக மோசமானதொரு நிலையைக் கையாள்வதற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் வேறு மாநிலங்களிலிருந்து தம் ஊர்களுக்குத் திரும்பி வருபவர்கள் அதிக அளவில் நோய் மேலாண்மை சவாலாக உருவாகி வருகின்றனர். இந்த ஊரடங்கால், ஏப்ரல் மாதத்தில் மட்டும் வருவாயில் 88% ஐ இழந்தோம்.
நிதி நிலைமை மிகவும் சிக்கலாகி உள்ளது. ஏற்கனவே அனைத்து அத்தியாவசியமற்ற துறைகளின் செலவினங்களையும் குறைத்து, அவற்றின் செலவுகளை நியாயமான முறையில் நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் ஒரு முடிவை எடுப்போம்” என்றுள்ளார்.