ஓடும் ரயிலில் பிரசவித்த பெண்..

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர யாதவ்.

பிழைப்புக்காக மனைவி ஐஸ்வாரியுடன் கடந்த மார்ச் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சென்றிருந்தார்.

இருவரும் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஓரிரு நாட்கள் மட்டுமே வேலை பார்த்த நிலையில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

சாப்பாட்டுக்கு வழி இல்லை.

மனைவி ஐஸ்வாரி வேறு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

லாரியிலாவது சொந்த ஊருக்குச் செல்ல எவ்வளவோ முயற்சி எடுத்தார், ராஜேந்திர யாதவ். பலன் இல்லை.

அவரது யோகம், பிலாஸ்பூருக்கு சிறப்பு ரயில் ஒன்று சனிக்கிழமை புறப்பட்டது.

கணவனும், மனைவியும் அதில் பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் நாக்பூர் பக்கம் ரயில் சென்று கொண்டிருந்தபோது ஐஸ்வாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஹெல்ப்லைன் மூலம் ரயில் அதிகாரிகளை ராஜேந்திர யாதவ் தொடர்பு கொண்டார்.

‘’அடுத்த ரயில் நிலையத்தில் டாக்டர்கள் காத்திருப்பார்கள்’’ என்று பதில் கிடைத்தது.

அடுத்த ரயில்  நிலையம் ரொம்ப தொலைவு இருந்தது. பக்கத்துப் பெட்டிகளில் பயணம் செய்த பெண்களின் உதவியை நாடியுள்ளார், ராஜேந்திர யாதவ்.

 அவர்கள் உதவியுடன் அழகான பெண் குழந்தையை ஓடும் ரயிலில் பெற்றெடுத்தார், ஐஸ்வாரி.

அடுத்த ஸ்டேஷனில் காத்திருந்த ரயில்வே மருத்துவர் குழு, ஐஸ்வாரியை சோதனை செய்து சில மருந்துகள் கொடுத்துள்ளது.

பிலாஸ்பூர் போய்ச் சேர்ந்ததும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்