சண்டிகர்: உள்கட்சி பிரச்சினை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, முதல்வருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும்  கிரிக்கெட் வீரருமான சித்துவுக்கும் இடையே மோதல் நீடித்துவந்தது. இந்த நிலையில், 2022ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும்  நடவடிக்கையாக, மாநில காங்கிரஸ் கட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. மாநில கட்சி தலைவராக சித்துவை காங்கிரஸ் கட்சி நியமித்தது. இதனால், அங்கு மேலும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அதிருப்தியுடன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.  இதைத்தொடர்ந்து,  புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.

அதிருப்தியில் இருந்து வந்த அமரீந்தர்சிங், ‘‘காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’’ என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக 7பக்க ராஜினாமா கடிதத்தை முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துடன்,   “பஞ்சாப் லோக் காங்கிரஸ்“  என்ற பெயரில் புதுக்கட்சியை அறிவித்தார்.

இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,  காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது ராஜினாமாவை அனுப்பி வைத்து உள்ளேன். ராஜினாமாவிற்கான காரணங்களை அதில் காரணங்களை பட்டியலிட்டுள்ளேன்.  அத்துடன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளேன். கட்சிக்கான பதிவு அனுமதி நிலுவையில் உள்ளது. கட்சியின் சின்னம் பின்னர் அங்கீகரிக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.