பாட்டியாலா
பஞ்சாப் அரசு 18-44 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கி உள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. காப்பீடு, பயணம் போன்ற பலவற்றுக்கும் இது பயன்படும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் இந்த சான்றிதழை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்தோ வைத்துள்ளனர். இந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது
கடந்த 1 ஆம் தேதி முதல் 18-44 வயதானோரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் இந்த பணிகள் தொடங்கப்படவில்லை. இதையொட்டி மாநில அரசுகள் 18-44 வயதானோருக்குத் தடுப்பூசிகள் போட நேரடி கொள்முதல் செய்து கொள்ளலாம் என அறிவித்தது.
இதையொட்டி பல மாநில அரசுகள் தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்துள்ளன. மேலும் தேவைக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. அவ்வகையில் பஞ்சாப் அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்த தடுப்பூசிகளை 18-44 வயதுடையோருக்குப் போட்டு வருகிறது.
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பஞ்சாப் அரசின் சுகாதார முதன்மைச் செயலர் ஹுசன் லால், “18-44 வயதானோருக்குப் பஞ்சாப் அரசு நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து பயன் படுத்தி வருகிறது.
எனவே சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படத்தைப் பஞ்சாப் அரசு நீக்கி உள்ளது. ஆனால் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த சான்றிதழில் இருந்து பஞ்சாப் அரசு பிரதமர் புகைப்படத்தை நீக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.