சண்டிகர்: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்து உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதையடுத்து இந்திய வீரர்கள் ஆவேசமாக விளையாடி, 5-04 கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து, வெண்கலத்தை வென்றது.
41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வரலாறு படைத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், வெண்கல வென்ற இந்திய ஹாக்கி அணியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங், ஷம்ஷெர்சிங், தில்பிரீத்சிங், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங் ஆகிய 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக கேப்டன் அம்ரீத்சிங் தலைமையிலான பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.