பொற்கோவிலில் நேற்று சேவை செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் மீது முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதி ஒருவன் அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த நிலையில் இன்று அவர் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள தக்த் கேஸ்கர் சாஹிப்பில் சேவை செய்து வருகிறார்.
2007 முதல் 2017 வரை பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தள அரசும் சுக்பீர் பாதல் கட்சியும் செய்த தவறுகளுக்காக, சீக்கியர்களின் மத அமைப்பான அகல் தக்த் அவருக்கு மதரீதியான தண்டனை விதித்தது.
அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைத் தவிர, தக்த் கேஸ்கர் சாஹிப், தக்த் தம்தாமா சாஹிப், மற்றும் முக்த்சரில் உள்ள தர்பார் சாஹிப் மற்றும் ஃபதேகர் சாஹிப் ஆகிய இடங்களில் தலா இரண்டு நாட்களுக்கு சேவதார் சேவையைச் செய்யுமாறு பாதலிடம் அகல் தக்த் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து பொற்கோவில் வாசலில் நேற்று இரண்டாவது நாளாக சேவை செய்த போது நடைபெற்ற கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பினார்.
பாதல் மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சி செய்த நபரை அங்கு சாதாரண உடையில் இருந்த காவலர் ஒருவர் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் லாவகமாக மடக்கிப் பிடித்ததை அடுத்து அந்த குண்டு பொற்கோயில் சுவற்றில் பட்டு தெறித்தது.
இந்நிலையில் பாதல் இன்று தக்த் கேஸ்கர் சாஹிப்பில் சேவை செய்வதை அடுத்து அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ள நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதை நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.