சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில்  இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு  குடும்பம் மற்றும் குற்றவியல் போன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நீதிமன்றத்தின் 3வது தளத்திலுள்ள கழிவறைக்குள் இன்று நண்பகல் 12.22 மணிக்கு  குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த  குண்டுவெடிப்பால், குளியலறையின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர், அப்பகுதியை சுற்றி வளைத்தனர். குண்டுவெடிப்பில் பலியானவர்களை மீட்டதுடன், காயமடைந்தவர் களை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியான நிலையல் 20 பேர் காயமடைந்துள்ளனர்.  போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.