சண்டிகர்: பாகிஸ்தான் பகுதிக்குள் இருக்கும் சீக்கியர்களின் புனித தலங்களுள் ஒன்றான கர்தார்பூர் காரிடார் திறக்கும் விஷயத்தில், பாகிஸ்தானின் நோக்கம், முழுமையாக நம்பக்கூடியதல்ல என்று பஞ்சப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தக் காரிடார் திறப்பு என்பது முற்றிலும் வழிபாட்டு நோக்கம் கொண்டது. ஆனால், பாகிஸ்தானின் நோக்கம் ஆபத்து நிறைந்தது. எனவே, அவர்கள் விஷயத்தில் நாம் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாகிஸ்தானின் முக்கிய குறிக்கோளே, சீக்கிய நம்பிக்கைகளை புண்படுத்த வேண்டுமென்பதுதான். அந்நாட்டின் பிரதமர் அமைதி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி பஜ்வா, தொடர்ந்து வேறுமாதிரியாக பேசிக் கொண்டிருக்கிறார்.
பஞ்சாபின் மக்சுதான் மற்றும் பதன்கோட் ஆகிய பகுதிகளில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள், பாகிஸ்தானின் உண்மையான நோக்கத்தை தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத்தால், கர்தார்பூர் காரிடார் வழியாக கடந்துசெல்ல முன்மொழியப்பட்ட யாத்ரிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறைந்தபட்சம் 15,000 யாத்ரிகர்களாவது, காரிடாரை தினந்தோறும் கடந்துசெல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார்.
– மதுரை மாயாண்டி