அமிர்தசரஸ்:

செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை 1 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களையும் மீறி இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு விவசாயிகளுடன் ஏற்கனவே நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. எனினும் அடுத்தசுற்று பேச்சுவார்த்தைக்காக விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதன்படி வரும் 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் எனவும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானாவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரியானாவில் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை நேற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பஞ்சாப்பில் தொழிலதிபர்களான அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சொந்தமான செல்போன் கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக பஞ்சாப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நேற்று முன்தினமும், நேற்றுமாக மாநிலத்தில் ஏறக்குறைய 176 செல்போன் கோபுரங்களை அவர்கள் சூறையாடி சேதப்படுத்தி உள்ளனர். அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இருந்த ஊழியர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இந்த 176 கோபுரங்களையும் சேர்த்து இதுவரை சுமார் 1,500 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் ஜியோ போன்ற செல்போன் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.