அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததாக லுப்தன்சா விமானத்தில் இருந்து பஞ்சாப் முதல்வர் இற்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் செப். 11 ம் தேதி சென்றார்.

தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் பலரை சந்தித்த அவர் இந்திய வம்சாவழியினர் நடத்திய விழாவிலும் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு பிராங்கபர்ட் விமான நிலையத்தில் இருந்து லுப்தன்சா விமானம் மூலம் இந்தியா வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உரிய நேரத்தில் கேப் வராததால் அவர் விமானத்தை தவறவிட்டதாக ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும் அவர் வேறு ஒரு விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் சக பயணிகள் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் முதல்வர் குறித்த இந்த தகவல் இந்தியர்களை குறிப்பாக பஞ்சாபில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.