பஞ்சாப்: மகனின் திருமணத்தை குருத்வாராவில் எளிமையாக நடத்தி முடித்த பஞ்சாப் முதல்வர், அங்கு தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். அவரது எளிமையான நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து, அம்ரீந்தர் சிங் பதவி விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில முதல்வராக செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார்.

பஞ்சாப் முதல்வரின் மகன் திருமணம்  மொஹாலியில் உள்ள ஒரு குருத்வாராவில் நடந்தது. இந்த திருமணத்தில் எளிமையாக கோட் சூட்டுடன் கலந்துகொண்டார். திருமணத்துக்கு குறைந்த அளவிலான உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், குருத்வாராவில் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. அப்போது, முதல்வரும்,  தரையிலேயே அமர்ந்து உணவருந்தினார். முதல்வராக இருந்தும், அவர்  தரையில் அமர்ந்து லங்கரில் உணவு உண்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பஞ்சாபி மொழியில் பொது உணவுக் கூடத்தின்/சமையலறையின் பெயர் “லங்கர்”. அதிலிருந்து அங்கு பரிமாறப்படும் உணவையும் “லங்கர்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு வயது வித்தியாசம் பாராமல் எல்லோரும் வரிசையாக கூடத்தின் தரையில் அமர்ந்து உணவருந்துவதே வழக்கம். இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற  ஏற்றம் இறக்கம் பார்ப்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.