சண்டிகர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏற்கனவேமுதலாவது மாநிலமாக கேரளா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்று பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  அதனப்டி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் கேரள அரசு உள்பட ஏராளமானோர்  வழக்குத் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும், இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த சட்டம், சமத்துவம், சுதந்திரம், மதச்சாா்பின்மை ஆகியவற்றுக்கு எதிரானது என அறிவிக்குமாறும் அந்த மனுவில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தை மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தாக்கல் செய்து உரையாற்றினார். இதற்கு பாஜக உறுப்பனிர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைநகர் டெல்லியில் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதன்மைச் செயலர்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர்களும் கலந்துகொள்ள உள்ள நிலையில், இன்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.