பரித்கோட், பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரால் அவமதிக்கப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக ஜுரம்ஜ்ரா பதவியில் உள்ளார். இவர் பரிக்தோட் நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன் தினம் ஆய்வு நடத்தி உள்ளார். அவருடன் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்பகதூர் உடன் இருந்துள்ளார்.
ஆய்வின் போது அமைச்சர் மருத்துவமனை படுக்கைகள் மிகவும் அழுக்காக உள்ளதாகக் குறை கூறி அதற்குத் துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அமைச்சருக்கு அந்த விளக்கம் திருப்தி அளிக்காமல் இருந்துள்ளது.
எனவே அவர் துணை வேந்தரிடம், “நீங்கள் இது போல அழுக்கு படுக்கையில் படுப்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ராஜ்பகதூரை அமைச்சர் ஜுரமஜ்ரா வலுக்கட்டாயமாக அதே படுக்கையில் படுக்க வைத்துள்ளார். இந்நிகழ்வு விடியோ காட்சியாக எடுக்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் வைரலாகியது.
சுமார் 71 வயதாகும் ராஜ்பகதூர் ஒரு மூத்த மருத்துவர் ஆவார். அவர் இது வரை பல்லாயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடத்திப் புகழ் பெற்றவர் ஆவார். அவருக்கு இந்த சம்பவத்தால் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு தம்மை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.