புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவினை தான் ஏற்பதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுவே உயிரிழந்த வீரர்களுக்கு தாம் செய்யும் மரியாதை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 14ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பணியை தொடர்வதற்காக சென்றுக் கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 40 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு வந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கும் செயலாக அமைந்தது. இத்தகைய கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. தாக்குதல் குறித்து கருத்து கூறிய பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும், அவர்களின் தியாகம் வீண் போகாது எனவும் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரியை உயர்த்தி மத்திய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானிற்கு இந்தியாவின் ‘மிகவும் வேண்டத்தக்க நாடு’ என்ற அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவினை தாம் ஏற்பதாக அறிவித்த்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ வீரர்களின் உயிரிழப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது. இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை என்னுடைய சேவாக் இண்டர்நேஷனல் பள்ளி ஏற்றுக் கொள்ளும். இது தான் வீரர்களுக்கு நான் அளிக்கும் மரியாதை” என குறிப்பிட்டுள்ளார்.
சேவாக்கின் இந்த முடிவை அனைவரும் வரவேற்பதுடன், தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, ரிலையன்ஸ் குழுமமும் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச்செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.