டெல்லி: பொதுவாக ஜனவரியில் போலி சொட்டு முகாம் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு 2முறை நடைபெற்ற இந்த முகாம், கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டு, ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது கொரோனா 3வது அலை பரவி உள்ளதால், போலி சொட்டு மருந்து முகாமை தள்ளி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் கூடுதலான பணிச்சுமையை உண்டாக்கும், அதனால், குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.